காதலை ஆதரிப்போம்!

காதல் என்பது சமூக இருப்பில் தவிர்க்கமுடியாத பாத்திரத்தை எப்போதும் வகித்துவருகிறது.உலகின் எல்லா தத்துவங்களும் வரலாறுகளும் காதலைத் தவிர்த்துவிட்டு நகரமுடியவில்லை. உலகின் சிறந்த சிந்தனையாளர்கள் காதல்வயப்பட்டே வாழ்ந்திருக்கிறார்கள். மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதங்கள்,நாகம்மையின் மறைவுக்கு பெரியார் ஈ.வெ.ரா எழுதிய இரங்கல் கடிதம் ஆகியவை உலகின் தலைசிறந்த இலக்கியப்பிரதிகளில் ஒன்றாய் ஆகக்கூடிய இயல்பைக்கொண்டுள்ளன. நீட்சே தன் வாழ்க்கையில் மூன்றுமுறை காதலித்து மூன்றுமுறையும் தோற்றுப்போனவன்


காதல் என்பது வாழ்வின் ஆதாரமாகவும் மனித இயல்பின் ஆகப்பெரிய உச்சமாகவுமிருக்கிறது. இன்னொருவகையில் பார்த்தால் இந்தியச்சமூகத்தில் காதல் என்பது அரசியல் நடவடிக்கையாகவும் இருக்கிறது. "அகமணமுறை இந்தியச்சமூகத்தில் சாதியைத் தீவிரமாகப் பாதுகாத்துவருகிறது" என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். சாதியின் இருப்பைக் கேள்விகுள்ளாக்குவதாகவும் ஒற்றைப் பண்பாட்டை மறுக்கக்கூடியதாகவும் காதல் இருந்துவருகிறது. எனவேதான் சாதியை மறுக்கும் யாவரும் காதலை ஒத்துக்கொள்கின்றனர்.


ஆனால் காதலர் தினத்திற்கு இருசாராரிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. சிவசேனா போன்ற இந்துத்துவ இயக்கங்களும் மருத்துவர் ராமதாஸ் போன்ற தமிழ்க்கலாச்சாரவாதிகளும் காதலர்தினத்தை எதிர்க்கின்றனர். இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை காதலர்தினம் என்பது மேற்கத்தியப் பண்பாடு. ஆனால் அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஒருபோதும்முன்வைத்தவர்கள் அல்ல. கலாச்சாரத்தளத்தில் மட்டும் மேற்கத்தியப் பண்பாடு வேண்டாம் என்று கூக்குரலிடுவது சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் தந்திரமன்றி வேறில்லை.


ராமதாஸ்போன்ற கலாச்சாரப்போலீஸ்களைப் பொறுத்தவரை மந்திரக்கதைகளிலே ஏழுகடல், ஏழுமலை தாண்டி மந்திரவாதியின் உயிர் ஒரு குருவியின் உடலுக்குள் ஒளித்துவைத்திருபதைப் போல தமிழ்க்கலாச்சாரம் என்பது தொடைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது என்பது அவர்களின் வாதம்.


மார்க்சியர்களும் காதலர்தினத்தை எதிர்க்கின்றனர. அதற்கு அவர்கள் சொல்லும்காரணம் காதலர்தினத்தின் மூலம் வாழ்த்தட்டைகள் ஆகியவற்றை ஏகாதிபத்தியம் சந்தைப்படுத்த முயல்கிறது, நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமைப்படுத்த முயல்கிறது என்பது. ஆனால் இன்று உலகமயமாக்கல் யுகத்தில் எல்லாமே சந்தையாக மாறியிருக்கிறது. இதைக்காரணம் காட்டிக் காதலர்தினத்தை மறுப்பது நியாயமாகத் தெரியவில்லை.


நுகர்வுக்கலாச்சாரத்தைத் தவிர்த்து சமயப்பண்டிகைகளுக்கு மாற்றாக கதலர்தினத்தைக் கொண்டாடும் வழிமுறைகள் குறித்து யோசிக்கலாம்.எபடியாயினும் காதல் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. நமது நாட்டார் தொனமங்கள் அனைவருமே காதலுக்காக சாதியை மறுத்து உயிர்விட்டவர்கள். காமமற்ற காதல், தெய்வீகக்காதல் போன்ற கற்பிதங்களிலிருந்து காதலை மீட்டெடுத்து நமக்கான காதலாக மாற்றுவோம். காலமெல்லாம் காதல் வாழ்க!
0 comments: