காதல் பரிசு!


அன்று வெகு நேரமாகியும் உறங்க மனம் இல்லாதவளாய் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் ராதா. மனதில் ஓர் பாரம் நிறைந்து கொள்ள… அவள் கண்களிலிருந்து வடிந்து ஓடிய கண்ணீர் தலையணையையும் நனைத்திருந்தது. ராதாவிற்கு பஞ்சனை முள்ளாய்க் குத்தியது. படுக்கப் பிடிக்காமல் எழுந்த ராதா ஜன்னலருகே சென்று ஜன்னலினூடே தன் பார்வையை மேயவிட்டாள்.


ஏதேதோ சிந்தனையில் ஊறிப் போய் நின்றவளும்… திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய்… திடுக்கென தன் கையைத் தூக்கி மணிக்கட்டைப் பார்த்தாள்.


ஓ… நேரம் எப்படிப் போனதோ தெரியவில்லை… என நினைத்தவளாய்… விரைந்து சென்று ரெலிபோனை எடுத்தாள்.


ம்… ராகவன் இப்போது வேலைக்கு வந்திருப்பான்… என மனதிற்குள் நினைத்துக் கொண்டவளாய்… அவனின் நம்பரைச் சுழற்றினாள்.


அலுவலகத்தில் தன் வேலையில் மூழ்கியிருந் தவனுக்கு அவனுடைய செல்போனின் சிணுங்கல் சத்தம் அவனைத் திசை திருப்ப… போனை எடுத்தவனும


ஹலோ… என்றான்…. மறுமுனையில் ராதா.


ஹாய் ராதா… என்னடி இந்த நேரத்தில…?


ஓ… ஏன் நான் எடுப்பதற்கும் நேரம் ஒதுக்கி வைத்திருக்கிறாயாடா?


அப்படியில்லையடி… ம்… சரி இப்போ ஏன் எடுத்தாய்?


ஏன்டா? நான் போன் எடுக்கக் கூடாதா என்ன?…உன் நினைவு வந்துது அதுதான் எடுத்தன். உன்னைப் போலவாடா நானும்?… எந்த நேரமும் உன் நினைவோடு, தனியே போராட்டம் நடத்துவது உனக்கு எங்கடா புரியப் போகுது?


ஏனடி இப்படிச் சலிச்சுக் கொள்ளுறாய்?… எனக்கு மட்டும் உன் நினைவு இல்லையா என்ன? எனக்குள்ளும் நீதானேயடி முழுசாய் நிறைஞ்து இருக்கிறாய்?


ம்…ம்… எனக்குத் தெரியும் தானேடா. சும்மா சீண்டிப் பாத்தன். அவ்வளவுதான். டேய்…. உன்னைப் பார்க்க வேணும் போல இருக்கடா… இண்டைக்கு வாறியா?… அதோட ஓர் முக்கிய விசயம் ஒன்றும் உனக்குச் சொல்ல வேணும் …


என்ன?… மகாராணிக்கு எண்டைக்குமே இலாத வேண்டாத தவிப்பு இண்டைக்கு?… சரி… என்ன ஏதோ முக்கிய விசயம் என்று இழுக்கிறாய்?… என்ன?


ஓ… ஏண்டா சொல்லமாட்டாய்?… ம்… எண்டைக்கும் இல்லாத தவிப்பா இண்டைக்கு எனக்கு? நேரில் வாடா உன்ன பாத்துக் கொள்ளுறன்… ராகவா!… ப்ளீஸ்டா… இண்டைக்கு வாவேண்டா…


ஓ!… அப்படியா? சரி. ராணியம்மா உத்தரவிட்டா தட்டவா முடியும்? சரி சரி வேலை முடிஞ்சதும் வாறனே…


ம்…. என் ராகவன் எண்டா என் ராகவன்தான்… சரிடா மாலை சந்திப்போமே… என்று சொல்லி ரெலிபோனை வைத்தாள் ராதா.


அவள் காத்திருந்த அந்த மாலைப் பொழுதும் வந்தது. ராகவனுடைய வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் ராதா.


அந்த இனிய மாலைப் பொழுதிலே என்றுமே இல்லாத ஏதோ ஒருவித புதுவித தவிப்பு அவள் உள்ளத்தை ஊடறுத்து கொண்டிருக்க… அவளின் நினைவுகள் யாவுமே பின்நோக்கிச் சிறகடித்துப் பறந்தன.தினசரி ராதா வேலைக்கு போகும் அதே பஸ்ஸில்தான் ராகவனும் பயணம் செய்வான். முதலில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து விட்டு தம்பாட்டுக்கு தமது பயணத்தை தொடர்ந்தவர்களின் பயணத்தில் இடையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இருவருக்குள்ளும் சிறு நெருக்கம் ஏற்பட்டது. காலப் போக்கில் அந்த நெருக்கம் நட்பாக மாறியது. ஒருவரை ஒருவர் அறியாமல் இருவருக்குள்ளும் பல மாற்றங்கள்.


ஒருவருக்காக ஒருவர் காத்துக் கிடப்பதும் காணாத வேளைகளில் தவித்துப் போதலும் தானாகவே உருவாகத் தொடங்கின. இந்த வேளையில் ஓர் நாள்…


ராதா உங்களுடன் ஓர் முக்கிய விசயம் கதைக்க வேணும்…


முக்கிய விசயமா? அப்படி என்ன முக்கிய விசயம் ராகவன்?


ம்… இனியும் சுற்றி வழைச்சு இழுத்தடிக்க எனக்கு விருப்பமில்ல ராதா. நான் நேரடியாக விசயத்துக்கு வாறன். எனக்கு உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு. உங்களையே நான் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறன். உங்கள என் எதிர்கால மனைவியாக்க விரும்பிறன் ராதா.


என்ன ராகவன் நீங்கள் சொல்லுறீங்கள்?


உங்களப் எனக்கு பிடிச்சிருக்கு. உங்கள மனதார விரும்புறன் எண்டு சொல்லுறன்.


என்ன விளையாடுறீங்களா?


நான் ஏன் ராதா உங்களோட விளையாடுறன்?உண்மையத்தான் சொல்லுறன். எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு.


ராதா எதுவுமே பேசாது மறு பக்கம் திரும்பி மௌனமாய் நின்றாள்.


ஏன் ராதா? நான் ஏதாவது தப்பா சொல்லி விட்டேனா? எதுக்கு மௌனம்? ஏன் என்னை பிடிக்கேல்லையா?


அப்போதும் ராதா பதில் எதுவும் சொல்லாது மௌனமாக நின்றாள்.


சரி ராதா… உடன பதில் சொல்லக் கஸ்ரம் என்றால்… யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்கோ. நல்ல முடிவொன்றை யோசிச்சுச் சொல்லுவீங்கள் என்று எதிர்பார்ப்போட நான் காத்திருப்பன்… என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டகன்றான் ராகவன்.


வாரங்கள் சில கழிந்தன. ஒவ்வொரு நாளும் பஸ்ஸில் இருவரும் சந்தித்துக் கொண்ட போதும்… ராதா பதில் எதுவுமே கூறவில்லை. அவன் நினைவுகள் யாவுமே இரவும் பகலும் அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தன.


உள்ளம் அவளுக்காகவும்… அவளின் நல்ல முடிவுக்காகவும் ஏங்கி ஏங்கித் தவித்தது. ஆனால் அவளோ அது பற்றி எதுவுமே கதைக்கவில்லை. அவளின் அந்தப் போக்கை தாங்கிக் கொள்ள முடியாதவனாய்த் தவித்தான் ராகவன்.


அன்றும் வழமை போலவே அதே பஸ்ஸில் வந்து ஏறி கொண்டாள் ராதா. அன்று அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள்.


நெற்றியில் சின்னதாய் ஒரு கறுப்பு ஸ்ரிக்கர் பொட்டு, காதுகளில் சின்னத் தோடுகள், கழுத்தில் புரளும் மெல்லிய சங்கிலி, கையில் ஒற்றை வளையல், மெல்லிய நீல நிறத்தில் ஆடை… பார்ப்பவர்கள் மீண்டும் ஒருமுறை சலனம் இல்லாமல் அவளது அழகைப் பார்க்கலாம். ம்… பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அந்த அழகு அவனைக் கொள்ளையடித்து கொல்லாமல் கொன்றது. இன்று எப்படியாவது அவளின் முடிவைக் கேட்டு விடவேண்டும் என நினைத்தவனாய்…


என்ன ராதா. நான் என்ர காதல மனம் திறந்து சொல்லி எத்தின நாளாச்சு? நீங்கள் இதுவரை ஒரு பதிலும் சொல்லேல்லயே?… என்றான் ராகவன்.


ராதாவின் மனதிற்குள்ளும் ராகவன் முழுதாக நிறைந்தே இருந்தான். அவனுடைய அமைதியான போக்கு, அன்பான பேச்சு அவளுக்கும் மிகவும் பிடித்தே இருந்தது. அவள் மனதை அவன் என்றோ திருடி விட்டிருந்தான் என்பதுதான் உண்மை.


எதற்கெடுத்தாலும் புருவத்தை உயர்த்தி, கண்களை அகல விரித்துச் சிரிக்கும் அந்த அழகிய சிரிப்பு எப்போதுமே அவளை இம்சை செய்து கொண்டே இருந்தது. ஆனாலும் அவளுக்குள் ஓர் தயக்கம்.


" என்ன ராதா யோசிக்கிறீங்கள்? ஏன் என்னை பிடிக்கேல்லயா?"


அப்படியில்ல ராகவன். நான்தான் ஓர் அனாதையாச்சே. உங்களுக்குத்தான் நான் ஏற்கனவே என்னைப் பற்றி எல்லாமே சொல்லி இருக்கிறனே? என்னை எப்படி?… என இழுத்தாள்.


ராதா… நான் உங்களத்தான் விரும்புறன். உங்களுக்கு பின்னால இருக்கிறவங்களையும் விரும்பேல்ல… உங்களுக்கு பின்னால எத்தின பேர் இருக்கினம் என்றும் நான் கேக்கேல்லயே?


"இல்லை ராகவன். என்னை உங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளுவாங்களா?"


ராதா… உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?.. இல்லையா? அதுதான் எனக்கு வேணும். மற்றவங்களப் பற்றி நீங்க யோசிக்க வேண்டாம். yes or no . இப்ப நீங்க எனக்குச் சொல்லியே ஆக வேணும்.


நாணம் அவளை ஆட்கொள்ள… பஸ்ஸின் வெளிப் பக்கம் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டு மெல்லிய குரலில்…


"உங்களை எனக்கு பிடிச்சிருக்கு ராகவன்"….. என்றாள்.


அவளின் பதில் கேட்டு அவன் உள்ளம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. சந்தோசம் பெருக்கெடுத்தோட யாருமே பார்த்திடாத வண்ணம் அவளின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான் ராகவன்.


---------------


யாருமில்லாதவளாய், எதிலும் பிடிப்பற்றவளாய் வாழ்ந்து கொண்டிருந்த ராதாவுக்கு ராகவனைக் கண்ட பின்பே வாழ்க்கை என்பதன் அர்த்தம் புரியத் தொடங்கியது.ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பு, பாசம், நேசம், காதல், பரிவு ஒருவருக்காக ஒருவரின் விட்டுக் கொடுப்புக்கள் எல்லாம் அவள் மனதில் நிறைந்து காதலாய்ப் பூத்திருந்தது. அன்று தொடக்கம்… ம்… இன்று நேற்றல்ல 5 வருடங்களாகவே அவனுக்காக அவள் காத்திருக்கிறாள்.


ஆழ்ந்த சிந்தனையில் சிறகடித்துப் பறந்தபடி… அவளின் வீட்டு மாடியில் நின்று ஜன்னூடாக வெளியே பார்த்த படி… ராகவனின் வருகைக்காகக் காத்து நின்றாள் ராதா. அப்போது …


பீப்… பீப்…. என கார் கோனின் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தாள். அவள் கண்கள் சத்தம் வந்த திசையை நோக்கின.


ஓ!… அதோ… அதோ… என் ராகவன் வருகின்றான் என்பதை அவள் கண்கள் கண்டு சொல்ல… மாடியிலிருந்து இறங்கி ஓடினாள் ராதா.


"ஏய்… ராதா சுகமா இருக்கிறியா?…"


"ஆமாண்டா ராகவா"… என செல்லமாய்க் கூறியவாறே ஒரு பக்கம் தன் தலையைச் சாய்த்தவாறே.. புன்முறுவலுடன் தலையை அசைத்தபடி நின்றாள் ராதா.


"என்ன ராதா? என்ன நடந்தது? முகத்தில உற்சாகத்தைக் காணோம்? கலகலப்பைக் காணோம்? சந்தோசத்தைக் காணோம்? என் மகாராணிக்கு என்ன நடந்தது? என்ன உடம்புக்கு நல்லா இல்லயா?…" என பதறியபடி ராகவன் கேட்கவும்…


"சீச்சீ… இல்லடா ராகவா… நான் எப்பவும் போல நல்லாத்தானே இருக்கிறன். மதியம் சாப்பிட்ட சாப்பாடுதான் இன்னமும் சமிக்கேல்ல…" என்றாள்.


"அது சரி. எதையும் அளவோட சாப்பிட வேணும் ராதா. அதை விட்டிட்டு அளவுக்கு மீறிக் கொட்டி, போட்டுத் தாக்கினால் இப்படித்தான்…" என கிண்டலடிக்கவும்…


"போடா உனக்கு எப்பவும் கிண்டல்தான்…


"என்ன ராதா முக்கியமான விசயம் உடனடியாக வா என்றாயே? அப்படி என்ன விசயம்?"….


"ம்… அதுக்கு வந்ததும் வராததுமாய் என்ன அவசரம்? உனக்கு எல்லாத்திலும் ரொம்பவும் அவசரம் தாண்டா. களைச்சுப் போய் வந்திருக்கிறாய். முதல்ல குளிச்சிட்டு வாடா … பிறகு ஆறுதலாய்க் கதைக்கலாம்" என்றாள்.


அவள் சொன்னதும் மறுவார்த்தை எதுவும் பேசாது எழுந்த ராகவனும்… குளித்து விட்டு வந்தான். வேலை முடிந்து வந்தவன் பசியோடு இருப்பான் என்பதை உணர்ந்தவளாய் அவனைச் சாப்பிடும் படி கூறினாள். அவன் வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொள்ளவும் . அவளும் அன்பாக உணவைப் பரிமாறினாள்.


"என்ன ராதா? என்ன விசயம் என்று சொல்ல மாட்டியா?"…


"சாப்பிடும் போது கதைக்கக் கூடாது என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவா…. கதையை விட்டிட்டு முதல்ல சாப்பிடடா"…. என்று அன்பாகக் கடிந்து கொண்டாள்.


"ம்… இப்போ சாப்பாடும் முடிஞ்சுது. இனியும் என் பொறுமையைச் சோதிக்காதே ராதா." என்றான்.

சிறிது நேரம் தயங்கி நின்ற ராதாவும்..


"ராகவன் வந்து… வந்து… என இழுத்தபடி…. என்மேல உனக்கு கோவம் வராதே?… என்றாள்.


"உன்மேல நான் கோவம் கொள்வதா?… நானா?… என்ன பைத்தியமா உனக்கு?… உன்மேல் கோவம் வா என்று சொன்னாலும் எனக்கு வருவதில்லையே… புதிர் போடுறதை விட்டு விசயத்தை சொல் ராதா"… என்றான்.


அவள் வெட்கத்தால் தன் இரு கைகளாலும் தன் முகத்தைப் பொத்திக் கொண்டு…


" ராகவன் வந்து… வந்து… நான் கர்ப்பமா இருக்கிறன்"… என தயக்கியபடி கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்டதும் கதிரையில் இருந்த ராகவன் சடாரென எழுந்தான். ராதா ஓர் கணம் திடுக்கிட்டு சற்று விலகி நின்றாள். எழுந்த ராகவன் அப்படியே ராதவைத் தூக்கி… ஓர் சுற்றுச் சுற்றி… சந்தோசக் கூத்தாடினான்.


------------------------"ராதா!… எவ்வளவு பெரிய ஓர் சந்தோசமான விசயம் சொல்லி இருக்கிறாய். இதுக்குப் போய் எதுக்கு பயந்து… தயங்கி… பைத்தியம்… பைத்தியம்… என அவளை அன்போடு அணைத்து உச்சி மோந்தான்…"ராதா எங்க… உடனடியா என்னோட கிளம்பு…"" எங்கே ராகவன்?


அதொன்றும் சொல்ல மாட்டன். முதல்ல கிளம்பி வா… என ராகவன் சொல்லவும், ராதாவும் பதில் எதுவுமே கூறாது வெளிக்கிட்டு அவனுடன் சென்றாள்.நேராக கோயிலை நோக்கிச் சென்றது அவனின் கார். காரிலிருந்து இறங்கியவனும் அந்தச் சந்நிதானத்திற்குச் சென்று ஐயரிடம் சொல்லி ஓர் அர்ச்சனை செய்தவாறே அந்தச் சாமி சாட்சியாக… அங்கே ஐயர் கொடுத்த அந்த மஞ்சல் கயிற்றை அவளின் கழுத்தில் கட்டினான்."ராகவா!…" என அவள் அழைத்தவாறே விழியை மேலே உயர்த்தி அவனைப் பார்த்தாள்."ராதா!… எதுவும் பேசாதே… என்று அவனின் பதில் வந்தது. ராதாவும் அவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைதியானாள்.இரவுப் பொழுது… படுக்கை அறையில் ராகவனின் நெஞ்சில் சாய்ந்தவாறே அமைதியாக இருந்தாள் ராதா… அவளின் அமைதியைக் கலைத்தவனாய்…"ராதா… என்மேல உனக்கு கோவமா?""எதுக்கு? ""இல்ல… ஊரறிய உலகறிய உனக்கு நான் தாலி கட்டல்ல என்று வருத்தப்படுகிறாயா?…""இல்ல ராகவன். உன்னை விட்டால் எனக்கென இந்த உலகில் யாருடா இருக்கிறார்கள்? நீ தானேடா எனக்கு எல்லாமே. இந்த ஆடம்பரம் ஒன்றும் எனக்கு தேவையில்லை. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் உங்கட வீட்டில தெரியாம செய்ததை நினைக்க ஒரு மாதிரி இருக்கு அவ்வளவுதான்.""ராதா!… என் அப்பா இறந்ததால குடும்ப சுமைகளை எல்லாம் நான் மட்டுமே சுமக்க வேண்டி இருந்ததால உன்னைக் கூட இவ்வளவு காலமும் தனிய இருக்க விட்டிட்டன். இரண்டு அக்காமாரையும் நல்ல மாதிரி கரை சேர்த்து விட்டன். இந்த வருடத்தோட என் தங்கையின் திருமணமும் முடிய உன்னை வீட்டார் சம்மதித்தாலும் சரி, சம்மதிக்காவிட்டாலும் சரி உன்னையே கல்யாணம் செய்வதாவே நான் முடிவு எடுத்தன். ஆனால்… நீ இப்போ என் வாரிசையும் சுமக்கிறதால, உன்னை மேலும் வேதனைப்படுத்த நான் விருப்பேல்ல. நீ என் மனைவியாக… என் வாரிசை சுமக்கிறாய்… என்ற சந்தோசத்தை தரவே நான் இந்த முடிவை எடுத்தேன் ராதா"…அவன் கூறியதைக் கேட்டு, அவள் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர்த் துளி அவன் நெஞ்சில் விழுந்தது."ஏய் ராதா?… எதுக்கு இப்ப கண்ணீர்? நீ இனி அழக் கூடாது ராதா. எப்பவும் சிரித்து சந்தோசமா இருக்க வேணும்…" என்று கூறியவாறு அவளை அன்போடு இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.மறு நாள் அவளிடமிருந்து விடைபெற்று வந்து கொண்டிருந்தவனுக்கு ராதாவை நினைத்துப் பார்த்த போது வேதனையாக இருந்தது. எனக்காக, என்னையே நம்பி என் பொறுப்புக்கள் முடியும் வரை காத்திருப்பேன் என்று இன்று வரை என்னையே நம்பிக் காத்திருந்தாளே… இப்போது என் வாரிசைச் சுமந்து கொண்டும் தனியே எனக்காகக் காத்திருக்கிறாளே… இதுவரை ஒரு நாள் கூட எனக்கு எந்தக் கஸ்ரமும் அவள் தந்ததே கிடையாதே. எவ்வளவு நல்ல மனம் கொண்டவள் அவள்? அப்படிப்பட்டவளை நான் இப்படித் தனியே தவிக்க விடலாமா?… என நினைத்துப் பார்த்த போது அவனின் நெஞ்சம் சோகத்தால் அடைத்தது.தன்னை, தன் நிலமையினை ஓர் தடவை எண்ணிப் பார்த்தான். அகத்தே தனது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பொறுப்புக்களையும், துயரங்களையும் தாங்கி வதைப்படும் பரிதாப நிலையை எண்ணிப் பார்த்து… தனது அக வாழ்வுக்கும் புற வாழ்வுக்கும் உள்ள பள்ளத்தை அளந்து பார்த்த போது அவனுக்கு தன் மீதே வெறுப்பு வந்தது.ஆனாலும் என்ன செய்ய முடியும்? தனக்கு தலையில் எழுதப்பட்ட விதி என எண்ணிய ராகவன் பெரிய பெரு மூச்சொன்றை வெளியே விட்டு நெஞ்சை ஆற்றிக் கொண்டான்.மாதங்கள் மிக விரைவாக ஓடிக் கழிந்தன. அன்று திடீரென சொல்போனின் சிணுங்கல"ஹலோ… ராகவன் சார் நிக்கிறாங்களா?""ஆமாம்… நான் ராகவன்தான் பேசுறன்.""நான் டாக்ரர் பேசுறேன். உங்கள் மனைவி ராதா இங்கே மருத்துவமனையில் அவசரமா அனுமதிக்கப் பட்டிருக்கிறாங்க. நீங்க உடனடியா வாங்க.""ஓ… அப்படியா? எந்த மருத்துவமனை?… டாக்ரர்… ராதாவுக்கு ஏதாவது ஆபத்தா? "… துடித்துப் போய் அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே… அவசர அவசரமாய் விலாசத்தை நோட் பண்ணிக் கொண்ட ராகவனும், உடனடியாய்ப் புறப்பட்டு அங்கே விரைந்து சென்றான்.அங்கே பிரசவ அறையில் ராதா போராடிக் கொண்டிருந்தாள். ராதா வலியில் துடிப்பதைக் கண்டு அவன் ஓர் கணம் ஆடியே போனான். ஆனாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளின் தலையைத் தடவியவாறே ராதாவிற்கு தைரியம் சொன்னான்.போராட்டம்… போராட்டம்… வலியோடு போராட்டம்… உயிரோடு போராட்டம்… டாக்ரர்கள் பதட்டத்துடன்… அவளுக்காகவும், வெளியுலகைத் தரிசிக்க வரும் குழந்தைக்காகவும் பல மணி நேரமாய்ப் போராடுகிறார்கள்.வலி தாங்க முடியாமல் அவள் கதறி அழுகிறாள். ஏதோ சொல்லிவிட அவள் உதடுகள் துடிக்கின்றன…"ராகவா…" என்றாள்… தொடர்ந்து வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன."என்ன ராதா?…என்ன?… பயப்படாதே. .. நானிருக்கிறேனல்லோ?"ராகவனின் கையை இறுகப் பற்றியபடி கதறி அழுகிறாள் ராதா. அவனுக்கு இதயம் மிக வேகமாக வலித்தது. அவனின் இதயம் அவனுக்கே அந்நியதாகத் தோன்றியது. இறைவன் மீது பாரத்தைச் சுமத்தினான். குழந்தை பிறக்கும் வரை அவன் அவனாக இல்லை.அங்கே புதியதோர் உயிர்…ம்.. குட்டி ராதா.. அழுகையோடு உலகை எட்டிப் பார்க்கிறாள்…சந்தோசம். அவன் மனதில் அளவில்லாத சந்தோசம். ஆனால்…அங்கே அதுவரை அவனின் கையை இறுகப் பற்றியிருந்த அவளின் கை சோர்ந்து விழுந்தது. கண்கள் மேலே செருகிக் கொள்ள அந்தக் கணமே அவள் மூச்சும் நின்றது.டாக்ரர் அவனின் தோளைத் தட்டியவாறு …"சாரி ராகவன்… உங்க மனைவி உயிரைக் காப்பாற்ற முடியல்ல"…. என்றார்."ஐயோ ராதா"… என அந்தக் கட்டிடமே அதிரும்படி குழறி அழுதான்.ஓவெனக் கதறி அழுதான். முடியவில்லை… அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கதறினான். அவளையும், குழந்தையையும் நெஞ்சோடு அணைத்தவாறே கதறினான்.யாரின் தேற்றலையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அங்கே யாருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாது கலங்கிப் போய் நின்றனர்.விக்கித்து… விழி பிதுங்கி எதிர்கால வாழ்வின் அத்தனை கனவுகளும் ஒரு கணப் பொழுதில் கருகிக் கானலாகி விட….ஒப்பற்ற ஓவியம் தீயிலிட்டுச் சாம்பலாகி விட்டது போல… கனவுச் சாம்ராஜ்ஜியம் சிதறிச் சிதைந்து போனது போல..அவனின் உயிர் ஓவியம்… அங்கே உயிர்ப்பிழந்து கிடந்தது.குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்தவாறே அவன் எழுந்தான். அவன் நெஞ்சத் திரையில் அவள் முதன் முதலாய்… காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய நாளும்…அதன் பின் எப்போதும் என்னவளாய் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விரல்கள் உரச நடந்து திரிந்த நாட்களும்… நான் உங்கள் கருவைச் சுமந்து அம்மாவாகி விட்டேன் என்று சொன்ன அந்த நாளும்… கடைசியாய் தந்த அந்த செல்லமான அன்பு முத்தமும்…அனைத்தும் அவன் மனதில் பசுமையான நினைவுகளாய் நிழலாட….அழும் குழந்தையின் முகத்தைப் பார்த்தவனாய்… தன் காதல் பரிசாகக் கிடைத்த குட்டி ராதாவை… தன் செல்ல மகளைத் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
Posted by Interior Design at 5:27 AM
0 comments: